பெரியாழ்வார்- வேங்கடவனின் அருள் திருவுளம்!திருக்குறிப்பே!

 சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு

தன்னை வாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா என்னையும்

என்னுடைமையையும் உன் சக்கரப்பொறியொற்றிக் கொண்டு

நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே.”

 

இது பெரியாழ்வார் திருமொழியில் கடைசிப் பதிகத்தின் முதல் பாசுரம்.

 

இந்த பாசுரத்தில் பெரியாழ்வார் திருமலையப்பனின் சௌலப்யத்தை

எடுத்துச் சொல்கிறார்- முதலில் அவனை “உலகு தன்னை வாழ நின்ற

நம்பி” தான் படைத்த இவ்வுலகம் வாழ வேங்கடத்தில் நம்மை வாழ்த்தி

நிற்கின்றவன் யார் என்றால் “நம்பி” என்கிறார். ’நம்பி” என்றால் குணபூர்த்தி

உடையவன்.  அவன் அருளை நம்பியன்றோ இன்றும் கோடிக்கணக்கில்

ஜனங்கள் அங்கே கூடுகிறார்கள்.

 

மேலும் அவனை “தாமோதரன்” என்று அழைக்கிறார்.

கண்ணிநுண் சிறுத்தாம்பினால்கட்டுண்ண பண்ணிய

பெருமாயன், தான் அவ்வாறு யசோதையின் பிரியத்துக்கு கட்டுண்டதை

பெயர் சூட்டிக் கொண்டிருப்பது- “ இதோ பாருங்கள் , என்

அம்மாவினால்கட்டுண்டு கிடந்ததின் தழும்பு (தாமோதரன்)”

என்பது எளிமையிலும் எளிமை அல்லவா!! ஆம், அவன் அடியவர்களுக்கு

எளியவன்!

அடுத்து “சதிரா” என்கிறார்.இச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும்,

இங்கு அடியார் குற்றங்களை கண்ணெடுத்தும் பாராதவன் என்பது

விளக்கம். தன் அடிசேர்ந்தவர் சரணாகதி செய்தவர், ராவணனே ஆனாலும்

குற்றம் பார்க்காமல் சேர்த்துக் கொள்வான்.

 

அடுத்து “ என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்

கொண்டு” என்கிறார். வைஷ்ணவ பக்தி லக்ஷணம் என்றால் எப்படி இருக்க

வேண்டும் எனக் கூறுகிறார்.

பஞ்ச சம்ஸ்காரம் வைணவர்களுக்கு அவசியம் என்பதை, “என்னை”

என்பதன் மூலம் தன் ஆத்மாவையும், “என் உடைமை” என்று தன்

சரீரத்தையும் உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என்கிறார். இவை

உண்மையில் என்னுடையவை அல்ல- அதனால் உன்னுடையவை

என்பதை உணர்ந்து உன் சங்கு சக்கர பொறி ஒற்றி உன்னிடத்தில் தந்தேன்

என்கிறார். நாம் நம் வீட்டு பாத்திரங்களில் நம் பெயரை பொறிப்பது போல!!

 

அடுத்து சரணாகதி செய்த பின்பு. இனி என் கையில் ஒன்றுமில்லை

என்கிறார்- “நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக்குறிப்பே.”

அப்பாடா, இனி பொறுப்பு விட்டது என “பொறுப்பு துறப்பு செய்கிறார்!!

 

இனி யாவும் அவன் திருவுளப்படி நடக்கட்டும்-அவன் தான் எனக்கு “சாரதி”.

அவன் என்னை வழி நடத்தட்டும். இதற்கு மேல் நான் செய்யக் கூடியது

எதுவுமில்லை என்பது,அவனோடு மனம் ஒன்றிய நிலை!

 

No comments:

Post a Comment

State of the Indian Economy: Navigating Global Uncertainties

 The global economic landscape is rapidly evolving, with trade policy uncertainty emerging as the key driver of the near-term outlook. Recen...