Azhwar and Nayanmar -linked by love for Tamil

 திருஞான சம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் சமகாலத்தவர்கள்

என்பது வரலாற்றின்படி சிலரின் தெளிந்த அபிப்பிராயம். கொள்கைகளால் இருவரும் வேறுபட்டவராயினும் “கற்றானைக் கற்றானே காமுறுவான்”
என்பதற்கொப்ப ஒருவரையொருவர் சந்திக்க ஆவல்
கொண்டிருந்தனர் என்பதும்     ஒருவருடன்     ஒருவர்
தமிழில் கவிபாடக் காலங்கருதிக் காத்து இருந்தனர்
என்பதும் கீழ்க்கண்ட இரண்டு தமிழ் பூம்பாக்களால் விளங்கும்.

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
    
கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
    
அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா
படியுண்ட பெருமானைப் பறித்து பாடி
    
பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
    
கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே

என்பது ஞானசம்பந்தர் தொடுத்த பாட்டு. அதாவது தன்னைத்
தாயாக பாவித்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.

தன்னைக் காத்துக் கொள்ளக் கருதிய வாளை மீனானது, முதலையின் வாயினின்று பிழைத்து, குளத்தில் தங்கியிராமல், வானில் தாவியும், அவற்றால் தாக்கப்பட்டு உயர்ந்த தென்னைமரத்தின் நெற்றுக்கள் கீழேவிழும்போது கமுக மரங்கள் அவற்றால் அசைவுற்று பாக்குக் குலைகளை குவிக்கின்ற, திருவாலி நாட்டாழ்வரே! பரம்பொருளாம், பூமியை விழுங்குகின்ற திருமாலை வழிப்பறி செய்தீர்.
உமது பவனியைக்காண என் மகள் ஒருநாள் வந்தபோது அவள்
உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர். இதுமுறையோ, எனது ஒரே
மகள்  தன் உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று

அகைச்சுவைபடக்கூறும் வகையில் திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும் திருடிவிட்டதாய் (வழிப்பறி செய்து விட்டதாய்) சம்பந்தர்
கூறினார்.

இதனைக் கேட்ட திருமங்கை, தன்னை பரகால நாயகியாய்-தலைவியாகப் பாவித்துக் கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப் பேச்சுப் பேசுகிறார்.

திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை
உயிர்ப்பித்துக் கொடுத்தார். இச்செய்தியை அடிப்படையாகக்
கொண்டு தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.

பலா மரமானது வாசனையுள்ள கனிகளை சிதறுவதால், ஒழுகிய நல்ல தேன் மிகுதிப்பட்டு சிறுகுட்டைகளின் கரைகளிலும், பெரிய குளங்களின் கரைகளிலும்,மடைகளிலும் ஒடும்படி, வெள்ளமாய் பரவுவதால்,வண்டுகள்

பேரோசை இடுகின்ற சீர்காழியில் வாழும் ஆளுடைய பிள்ளையாராகிய ஞானசம்பந்தரே, நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை
என்பர் பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து
காணாக் காதலுற்று பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட
அனலாக வேகும்படி நிலவில் வெந்திருக்கிறேன். தாங்கள்
மயிலாப்பூரில் தீயினால் சுடப்பட்ட ஒரு பெண்ணை பிழைக்கச்
செய்தீரே அது என்ன விந்தை. அது போன்றே தங்களைக் காண
விரும்பி நிலவின் வெப்பத்தினால் சுடப்பட்ட இந்தப் பெண்ணுடன் கூடி
உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை நிலைக்கும் என்றார். அப்பாடல்..

வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
    
மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
    
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
    
அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
    
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே
                -
என்று பாடினார்

பக்திச் சோலையிலே திளைத்து பாசுரங்களை இறைவனுக்கு
வாரித்தெளித்த இவ்விரு கவி வள்ளல்களும் ஒரே நேரத்தில்
(தாய்ப்பேச்சு, தலைவிப்பேச்சு அகச்சுவை) இரண்டு ஆன்மீக பூமாலைகளாய் தொடுத்து தமிழன்னைக்கு அணிவித்து விட்டனர்.

இந்த இரு பாடல்களும் “தனிப்பாடல் திரட்டு” என்பதில் காணப்படுபவை.

பெரிதிருமொழி மூன்றாம் பத்தில் உள்ள “ஒருகுறளாய்” என்ற பாசுரம் பாடியமைக்கு திருமங்கையாழ்வாருக்கு சம்பந்தர் பின்னர் “வேல்” கொடுத்து “நாலுகவி பெருமாள்” (ஆசுகவி, சித்திரக்கவி, விஸ்தாரக்கவி, மதுரகவி) என்ற பட்டமும் கொடுத்தார் என்பது தனிக்கதை

No comments:

Post a Comment

State of the Indian Economy: Navigating Global Uncertainties

 The global economic landscape is rapidly evolving, with trade policy uncertainty emerging as the key driver of the near-term outlook. Recen...